தமிழ் உலக சினிமா
    


நடிகர்கள்
ஜெய்சங்கர்
எம்.ஜி.ஆர். போல் செல்வாக்கோ, சிவாஜி கணேசனைப் போல் மிகச் சிறந்த நடிப்பாற்றலோ, ஜெமினி கணேசனைப் போல் பெண்களை வசியம் செய்யும் அழகோ, ரவிச்சந்திரனைப் போல் ஸ்டைலோ இல்லாமல், ஒருவரை நம் தமிழ் திரை உலகம் கொண்டாடி மகிழ்ந்ததென்றால் அவர் தென்னகத்து_ஜேம்ஸ்_பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர் மட்டுமே.

வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஜெய். சுப்பிரமணியம் சங்கர் என்ற இயற்பெயரைத் திரைப்படத்துக்காக ஜெய்சங்கர் என்று மாற்றிக்கொண்டார். இயக்குநரும் நடிகருமாக இருந்த சோவின் விவேகா பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழுவில் பணியாற்றிவந்தவர், ‘இரவும் பகலும்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா’ என்ற பாடலால் பட்டி தொட்டியெல்லாம் ஜெய்சங்கர் பிரபலமானார். அதே படத்தில் ஆலங்குடி சோமு எழுதிய ‘இரவும் வரும் பகலும் வரும்’ என்ற பாடலும் ஜெய்சங்கர் என்ற நடிகரை வாழ வைத்தது.

‘பொம்மலாட்டம்’, ‘குழந்தையும் தெய்வமும்’, ‘மன்னிப்பு’, ‘பூவா தலையா’, ‘பட்டணத்தில் பூதம்’, ‘நீ’, ‘வைரம்’, ‘செல்வமகள்’, ‘டீச்சரம்மா’, ‘யார் நீ’, ‘கண்ணன் வருவான்’, ‘அவசர கல்யாணம்’ போன்ற படங்களில் குடும்ப சென்டிமென்ட் மற்றும் மென்மையான காதல் உணர்வுகளை ஜெய்சங்கர் அற்புதமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

இருப்பினும், ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் தான், ஜெய்சங்கருக்குத் தனி அந்தஸ்து பெற்றுத் தந்தன. ‘சிஐடி சங்கர்’, ‘வல்லவன் ஒருவன்’, ‘கருந்தேள் கண்ணாயிரம்’, ‘கங்கா, ஜக்கம்மா’, ‘ஜம்பு’ , ‘எங்க பாட்டன் சொத்து’, ‘ஒரே தந்தை’, ‘காலம் வெல்லும்’ போன்ற படங்கள் ஜெய்சங்கரை ஆக்ஷன் ஹீரோ மாற்றியது.

ஜெய்சங்கர் நடிப்பில் நூறு படங்களை தாண்டிய போதும், மூன்று, நான்கு வண்ணப்படங்களில் மட்டுமே நடித்திருந்தார். காரணம் அவர் படங்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துக் கொண்டிருந்தன.

தமிழ்நாட்டின் ராபர்ட் டி நீரோவாக கௌபாய் படங்களில் நடித்த ஜெய்சங்கர் இறுக்கமான முகத்துடன் எதிரிகளைப் பழிவாங்கும் கதாபாத்திரத்தில் அற்புதமாகப் பொருந்தினார்.ஜெய்சங்கர் நடித்த ‘கங்கா’ என்னும் படத்தில், நான்கு வில்லன்களைக் கொன்று சவக்குழியில் புதைக்கும் வன்மம், ஜெய்சங்கரின் நடிப்பிற்கு சிறந்த எடுத்துக் காட்டு.

ஆனால், இந்தப் படத்தில் ராஜ்கோகிலா, ஜெயமாலா, ராஜ்மல்லிகா போன்ற நடிகைகள் படுகவர்ச்சியாக நடித்ததினால், பெண்கள் ஜெய்சங்கர் படங்களை நிராகரிக்கத் தொடங்கினர்.

அதன்பின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் வருகையும் ஜெய்சங்கர் பின்னடைய ஒரு காரணமாக அமைந்தது. ‘காயத்ரி’ படத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், எழுத்தாளர் சுஜாதா கதையெழுதிய இந்தப் படத்தில் ஜெய்சங்கரை விடவும் கூடுதலாக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு ஏ.வி.எம்.ன் ‘முரட்டுக்காளை’ படத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எட்டிவிட்ட ரஜினியுடன் வி்ல்லனாக நடித்த ஜெய்சங்கர் தொடர்ந்து வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். ‘ஊமை விழி’களில் தமது வயதுக்கேற்ற பத்திரிகையாளர் வேடத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

61 வயதில் காலமான ஜெய்சங்கர், கடைசி வரை நடித்துக்கொண்டுதான் இருந்தார். விஜயகுமார், ஜெய்கணேஷ் போல் ஹீரோவாகத் தோன்றி வெகு விரைவாக வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் மாறியவர் அல்ல ஜெய். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் கதாநாயகன்தான். இன்றும் அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளன.

சீனியர்களை ஓரம் கட்டுவதும் நேற்று அடித்த காற்றில் முளைத்த காளான்கள் மேலே வருவதும் எல்லாத்துறைகளிலும் நடப்பதுதான். ஆனால் ஜெய்சங்கரை ஓரம் கட்டியவர்கள் கமலும் ரஜினியும்தான். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற மிகப்பெரிய போட்டிகளைச் சமாளித்த ஜெய்சங்கரால் வயது முதிர்வு காரணமாக, கமல், ரஜினியின் போட்டியைச் சமாளிக்க முடியவில்லை. இந்த இரு வல்லவர்களிடம் அந்த ‘வல்லவன் ஒருவன்(ர்)’ பின்னடைந்து விட்டார்.

ஆயினும் தனித்துவம் மிக்க நடிப்பாலும் தோற்றத்தாலும் கபடமற்ற வாழ்க்கையாலும் உதவிகள் தேவைப்படும் பலருக்கும் அள்ளித்தந்த வள்ளல் நெஞ்சம் கொண்டவராக இருந்ததாலும் ஜெய்சங்கர் என்ற மனிதரும் கலைஞரும் உயர்ந்து நிற்பதைக் காண முடிகிறது.